பிரான்ஸ் செப்டம்பரில் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் – மக்ரோன் அறிவிப்பு!
செப்டம்பர் மாதம் பலஸ்தீன அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ‘X’ சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முதல் G7 நாடாக பிரான்ஸ் திகழும். இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது.
காசாவில் போர் முடிவுக்கு வருவதற்கும், பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கும் தற்போது உடனடித் தேவை உள்ளது என்று மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். “சமாதானம் சாத்தியமே. எங்களுக்கு உடனடி போர்நிறுத்தம், அனைத்து பணயக்கைதிகளின் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு பாரிய மனிதாபிமான உதவி தேவை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்ரோனின் இந்த முடிவை பலஸ்தீன அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். இருப்பினும், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த நடவடிக்கையை விமர்சித்து, இது ஹமாஸின் அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்குப் பிறகு “பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகும்” என்று கூறியுள்ளார்.

