மத்தளை விமான நிலைய மேம்பாட்டிற்கு புதிய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

மத்தளை விமான நிலைய மேம்பாட்டிற்கு புதிய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, மத்தளை ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) செயற்பாடுகளையும் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காகப் தனியார் துறையினரிடமிருந்து புதிய ஆர்வ வெளிப்பாடுகளை (EOI) கோரியுள்ளது.

இந்த நடைமுறையை உத்தியோகபூர்வமாக்கி, தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படாத இந்த விமான நிலையத்திற்குப் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு அறிவித்துள்ளார்.

மத்தளை விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் முன்னைய ஒப்பந்தம் கைவிடப்பட்ட பின்னரே இந்த புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினரில் ஒருவர் அமெரிக்காவின் தடைகளுக்கு உட்பட்டிருந்ததால், தேசிய வான்வெளி இறைமை தொடர்பான கவலைகள் எழுந்தன. இதன் காரணமாக அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிட்டது.

இந்த புதிய ஆர்வக் கோரிக்கையின் மூலம் பெறப்படும் அனைத்துப் பிரேரணைகளையும் அரசாங்கம் மிக உன்னிப்பாக மதிப்பாய்வு செய்து, விமான நிலையத்தை புத்துயிர் பெறச் செய்ய மிகவும் பொருத்தமான முதலீட்டாளர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று பிரதி அமைச்சர் கொடித்துவக்கு வலியுறுத்தினார்.

தற்போது, மத்தள விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 3 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்து வருகிறது. தனியார் துறை முதலீட்டின் மூலம் விமான நிலையத்தை இலாபகரமான மற்றும் செழிப்பான விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற அரசாங்கம் நம்புகிறது.

Recommended For You

About the Author: admin