யாழ் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்..!

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டுக் குழுக்கூட்டம்..!

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.07.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்படது.

01.சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை பிரதேச செயலக மட்டத்தில் ஆராயப்பட்டு தீர்க்கப்படுவதுடன், தீர்க்க முடியாத பிரச்சனைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்து தீர்ப்பதற்காகவே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

02.அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்ததுடன், சிறுவர் நலன்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

03.மாணவர் இடைவிலகல் தொடர்பாக இடைவிலகிய மாணவர்களின் குடும்பச் சூழல் பொருளாதார சூழல் காரணிகளை கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

04.இளவயது திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற சமூகப் புரழ்வான விடயங்கள் – அதிகமாக அடையாளம் காணப்பட்ட கிராமங்களில் அல்லது இடங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பினைப் பெற்று விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடாத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

05.பிள்ளைகளின் பதிவு செய்யப்படாத பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையினை நடாத்துமாறும், அந்தவகையில் உடுவில், சண்டிலிப்பாய், சங்கானை, காரைநகர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரிவிற்குரிய நடமாடும் சேவையினை உடுவில் பிரதேச செயலகத்தில் ஆவணி மாதம் 06 ஆம் திகதியும், சாவகச்சேரியில் ஆவணி 13 ஆம் திகதியும், வேலணை, ஊர்காவற்றுதறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரிவிற்குரிய நடமாடும் சேவையினை வேலணை பிரதேச செயலகத்தில் ஆவணி மாதம் 21 ஆம் திகதியும், யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரிவிற்குரிய நடமாடும் சேவையினை நல்லூர் பிரதேச செயலகத்தில் ஆவணி மாதம் 27 ஆம் திகதியும் நடாத்த ஒழுங்கமைப்பினைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட வர்களுக்கு அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இவை தொடர்பான அறிவுறுத்தல்களை பாடசாலை அதிபர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறும் அதிபர்களுக்கான கூட்டத் திகதியினை அறியத் தந்தால் எமது உத்தியோகத்தர்கள் மூலம் விபரமாக தெளிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

06.மாணவர்கள் தொடர்பான நலன்பேணுவதற்கும் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை நடாத்துவதற்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் தேவையான உத்தியோகத்தர்கள் இருப்பதனால், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

07.நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு மற்றும் எழுவைதீவிலுள்ள – சகல பாடசாலை களிலும் ஆவணி மாதத்தில் பொருத்தமான திகதிகளில் தொழில்கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு செயற்றிட்டத்தினை நாடத்துமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டதுடன், கூட்டத்தில் மேற்படி செயற்றிட்டத்தினை மேற்கொள்ள விருப்பத்துடன் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மேலும், அவர்களுக்கான போக்குவரத்து ஒழங்குகள் தம்மால் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.

08.பாடசாலைகள் மற்றும் கிராமத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 06 மாத கால (யூலை – டிசெம்பர்) வேலைத் திட்டத்தினை (Work Plan) பிரதேச செயலகங்கள் தயாரித்து மாவட்டச் செயலகத்திற்கும் பிரதியினை வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தினார்.

09.பிரதேச செயலகங்களில் நடைபெறும் சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் அதிகாரியினை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin