சாவகச்சேரி உப்புக்கேணி குள அபிவிருத்தி தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தவிசாளருடன் கலந்துரையாடல்..!
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் அமைந்துள்ள உப்புக்கேணிக் குளத்தின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நகரசபையின் புதிய தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் செயலாளருடன் கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் 01/07 செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
கடந்த மாரி காலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக உப்புக்கேணிக் குளத்தினைச் சூழவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் தமக்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக் கோரி ஆளுநர்,அரசாங்க அதிபர்,சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேச செயலகத்தை அணுகியிருந்தனர்.
இந்நிலையில் பொதுமக்களின் வேண்டுகோள் மற்றும் அரச அதிகாரிகளின் பணிப்பிற்கு அமைவாக சாவகச்சேரி நகரசபை தனது 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீரை கடத்துவதற்கான வடிகால் அமைக்க 7மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருந்தது.
அதன் அடிப்படையிலேயே மாரி காலத்திற்கு முன்னர் மேற்படி நிதியை முறையாக குளப் புனரமைப்பு அல்லது வடிகாலமைப்புச் செயற்பாட்டிற்கு பயன்படுத்துமாறு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் த.சுபேசன் மற்றும் செயலாளர் க.தர்ஷன் ஆகியோர் வலியுறுத்தியிருந்தனர்.
இதன்போது உப்புக்கேணி குள புனரமைப்புப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் உறுதியளித்திருந்தார்.

