யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (25.06.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு ரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் வாழ்வாதாரத்தில் விவசாய மற்றும் மீன்பிடி பிரதானமானது எனவும், அந்த வகையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து பொருத்தமான இயலளவான தீர்வுகளை காண்பதற்காக இவ்வாறான கூட்டத்தினை ஒழுங்கு செய்த கெளரவ அமைச்சர் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்.
கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், கடற்றொழி்ல் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து,
அவற்றுக்கு விரைவான முடியுமான உயர்ந்த பட்ச தீர்வுகளை வழங்குவதே இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எனவும், நாடுதழுவிய ரீதியாக குறிப்பாக பிரதானமான கடல்வளங்களை அண்டிய 15 மாவட்டங்களில் கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடாத்தி பிரச்சினைகளை ஆராய்ந்து வருவதாகவும் அந்தவகையில் இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது கூட்டம் எனவும் தெரிவித்தார். மேலும், இக் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நடாத்தவுள்ளதாகவும், மூன்று வார முன்னறிவித்தலின் அடிப்படையில் கூட்டம் நடாத்தப்படும் எனவும், கூட்டத்திற்கு முன்னர் தங்களின் ஆலோசனைகள் பரிந்துரைகள் பிரச்சினைகளை எழுத்து மூலம் அரசாங்க அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும் பட்சத்தில் எம்மால் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளை அழைத்து ஒருங்கிணைத்து விரைவான தீர்வுகளை காணமுடியும் எனவும் கெளரவ அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்கள் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை அமைச்சில் எடுத்தாலும், பிரதேச மட்டத்தில் உள்ளூர் அமைப்புக்களை ஒன்றிணைத்து தீர்வுகளை காண வேண்டும் எனவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் சார்ந்த குடும்பங்கள் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 38% ஆகவுள்ளதாகவும், அதனால் விசேடமாக கவனிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் அதிமேதகு சனாதிபதி அவர்கள் கடற்றொழி்ல் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழி்லாளர்களின்பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார் எனவும், எமது அரசாங்கம் வறுமை ஒழிப்பு, டியிற்றல் முறைமை மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்து கடற்றொழி்லாளர்கள் பிரச்சினைக்குரிய தீர்வுகளை ஒன்றிணைந்து காண வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, உள்ளூர் மீனவர்களின்சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள், மயிலிட்டி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்தி போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர், வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாாிகள் மற்றும் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்


