16 மோட்டார் சைக்கிள்களை பண்டாரகம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டதாக கூறப்படும் நான்கு அதியுயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட 16 மோட்டார் சைக்கிள்களை பண்டாரகம பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் இந்த மோட்டார் சைக்கிள்களை அதிக சத்தங்களை எழுப்பி ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதனால் வெசாக் நிகழ்வுகளில் பங்கேற்கச் சென்ற பொது மக்களுக்கும், வீதியில் சென்ற ஏனைய வாகன சாரதிகளும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொரலஸ்கமுவ, கெஸ்பேவ, பண்டாரகம, தொடங்கொட, களுத்துறை, ஹோமாகம மற்றும் இங்கிரிய உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட நான்கு அதியுயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் பதிவுத் தகடுகளை சோதனை செய்தபோது சந்தேகத்திற்குரியதாக இருப்பது ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸார் பறிமுதல் செய்த ஏனைய அனைத்து மோட்டார் சைக்கிள்களிலும் சைலன்சர்கள் அகற்றப்பட்டுள்ளதோடு, வீதியில் வாகனத்தை ஓட்டும்போது பாதசாரிகளை அச்சுறுத்தும் விதத்தில் சத்தத்தை ஏற்படுத்தும் வகையில் ஏனைய பாகங்கள் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இளைஞர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸார், எதிர்வரும் நாட்களில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin