முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையான 27 மாதங்களில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 காலாண்டில் அச்சிடப்பட்ட 58,800 கோடி ரூபா
2020 ஆம் ஆண்டு 50 ஆயிரத்து 50 கோடி ரூபா அச்சிடப்பட்டுள்ளதுடன் 2022 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையான முதல் காலண்டில் மாத்திரம் 58 ஆயிரத்து 800 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் எடுத்த கொள்கை ரீதியான தீர்மானம்
எவ்வாறாயினும் இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பதவிக்கு வந்த பின்னர், பணத்தை அச்சிடுவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்தார்.
எனினும் அந்த தீர்மானத்தை இதுவரை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2024 ஆம் ஆண்டு பணம் அச்சிடுவது நிறுத்தப்படும் என கூறியிருந்தார்.