இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள்: ஆரம்பமானது போராட்டம்!
இலங்கையின் சுதந்திரம் தினம் தமிழர்களின் கரிநாள் என்கின்ற கோஷத்தின் அடிப்படையில் மக்கள் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கொண்டிருக்கின்றது.
வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப் போராட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வருகின்ற நிலையில், வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன என்று, செய்திகள் வெளியாகியுள்ளன.
வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உட்பட வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளமையுடன்,
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று, அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.