இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது!
இலங்கையை பந்தநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடந்து முடிந்த டி20 தொடரை நியூசிலாந்து அண் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில், நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜனவரி 05) வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக இல்லை. அந்த அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா 6 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 2 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 3 ரன்னிலும், கேப்டன் சரித் அசலங்கா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனால் இலங்கை அணி 23 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் ஜனித் லியானகே இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதன்பின் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜனித் லியானகே தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து 56 ரன்களைச் சேர்த்த நிலையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த சமிந்து விக்ரமசிங்கா – வநிந்து ஹசரங்கா இணையும் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் விக்ரமசிங்கா 22 ரன்னிலும், வநிந்து ஹசரங்கா 35 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இலங்கை அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது.
மேலும் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய வில் யங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவருடன் இணைந்த மார்க் சாப்மேனும் பொறுப்புடன் விளையாட அணியின் வெற்றியும் உறுதியனது. இறுதியில் வில் யங் 12 பவுண்டரிகளுடன் 90 ரன்களையும், மார்க் சாப்மேன் 29 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 26.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.