மனுஷவிடம் CID வாக்குமூலம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக விசாரணைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கால விசாரணைகளில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் இது தொடர்பான வாக்குமூலம் பெறப்படும் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் காவல்துறையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நிதி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர நாணயக்கார நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவினை பெற்று மோசடி செய்தமை தொடர்பில் கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவர் திசர நாணயக்காரவுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பிபிலை பகுதியில் வைத்துக் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குத் தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதுடன் அது தொடர்பான சாட்சியங்களும் பெறப்பட்டு வருகின்றன.

அதனூடாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என விசாரணைக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin