“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

புதிய வருடத்தில் கடமைகளை ஆரம்பிக்கவுள்ள முதல் நாளான இன்று (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறவுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளரின் ஊடாக சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டவாக்க பேரவை தலைவர்களுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச துறை மற்றும் தனியார் துறையினரால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (1) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

பொது நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு நிகராக ஒரே நேரத்தில் தமது பணியிடங்களில் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

“க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய விழாவை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதனைப் பார்க்கும் வசதியை அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்கும் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தூய்மையான இலங்கை உறுதிமொழியை வாசிக்க அனைத்து அரச ஊழியர்களும் நேரலையில் இணையுமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தனது சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin