தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், மிகவும் பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“இன்று எனக்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தது. 68 பக்க தீர்ப்பு. மிகவும் பொருத்தமான முடிவை எடுத்து அதை செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 3 விருப்பங்களில் எது மிகவும் பொருத்தமானது என்று என்னால் உடனடியாக சொல்ல முடியாது. அதை ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
“வழக்கமாக, புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை வழங்குவதற்கு சுமார் 40 நாட்கள் ஆகும். முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது, அடிப்படை மனித உரிமை மீறல் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் இருந்து பொருத்தமான பரிந்துரையை தெரிவு செய்து அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு, நீதியரசர்கள் குழு உத்தரவிட்டிருந்தது.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும், பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
“மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொடுக்க சுமார் 4 மாதக்காலங்கள் தேவைப்படுகிறது. அதனை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வௌியிட முடியும் என நினைகிறேன்” என்றார்.