இந்த ஆண்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஆனால், பல சுற்றுலாப் பகுதிகளில் போதுமான பொது வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மூன்றாவது பெரிய துறையாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது.
2024ஆம் ஆண்டில் சுற்றுலா இலக்கான 2 மில்லியனைத் தாண்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏற்கெனவே நாட்டுக்கு வந்துள்ளனர் என்றும் இதனால், இந்த ஆண்டு சுற்றுலா வருவாய் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டும் என்றும், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கணித்துள்ளது.
தற்போது நாட்டின் பல முக்கிய சுற்றுலாத் தலங்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன. இது, நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புதிய நம்பிக்கையை அளித்திருக்கிறது.
இவ்வாறான ஒரு நல்ல சூழல் உருவாகியுள்ள போதிலும், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக விளங்கும் எல்ல பிரதுசத்தின் நிலை மிகவும் திருப்திகரமாக இல்லை என்றும் அங்கு பல குறைபாடுகள் காணப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த சரியான இடம் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முன்னதாக, சுற்றுலாப் பயணிகள் உணவகங்களுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதற்கு வாய்ப்பிருந்த போதிலும், அதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளமையால் பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளதாகப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு கட்டமைப்பு இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பொலன்னறுவையின் தொல்பொருள் இடிபாடுகள் மற்றும் தேசிய பூங்காக்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் பயணச்சீட்டுக் கட்டணம், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.
2025ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ,லட்சியத்தை நனவாக்கும் வகையில், இப்பிரச்சினைகளை விரைவில் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, பல தரப்பினரும் கோரிக்கை முன்வைத்திருக்கின்றனர்.