ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன, தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தப் பொய்யான செய்திகள் மூலம், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்கள் உள்ளதாக, கௌசல்யா ஆரியரத்ன தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
“என்னைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்தவர்கள் உட்பட சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தீங்கிழைக்கும் மற்றும் தவறான செய்திகள் குறித்து நான் சிஐடியிடம் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் கூறுகிறார்.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான தாக்குதல்கள் அமைந்துள்ளன என்றும், கௌசல்யா குறிப்பிட்டிருக்கிறார்.
“இதுபோன்ற கீழ்த்தரமான தந்திரங்கள், பெண்கள் அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் என்று யாராவது நம்பினால், அவர்கள் நினைப்பது தவறு. இவ்வாறான தந்திரங்களால் அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இன்னும் கடுமையாக முயற்சிகளை முன்னெடுங்கள் என்றே நான் கூறுவேன்” என்று அவர் கூறுகிறார்.