சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்திய போட்டிகள் டுபாயில்- பாகிஸ்தானுடன் பெப். 23 இல் பலப்பரீட்சை
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு வெளியில் இந்தியா ஆடும் போட்டிகளுக்கான பொதுவான இடமாக டுபாய் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெறவுள்ளது. முன்னதாக பாகிஸ்தானில் தொடர் முழுவதையும் நடத்த ஏற்பாடாகி இருந்தபோதும் இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால் இந்தியாவின் போட்டிகள் பொதுவான மைதானத்தில் நடத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 2027 வரை இந்தியாவால் நடத்தப்படும் எந்த ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் பொதுவான மைதானத்தில் ஆடுவதற்கு இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மூத்த அமைச்சர்களில் ஒருவரும் அந்நாட்டு கிரிக்கெட் சபை தலைவருமான ஷெய்க் ஹங்யானை, பாக். கிரிக்கெட் சபை தலைவர் மொஹ்சின் நக்வி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்தே இந்திய போட்டிகளை டுபாயில் நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் குழு நிலைப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி டுபாயில் இடம்பெறும். இந்தியா இடம்பெறும் குழுவில் இருக்கும் மற்ற அணிகளான பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தியாவின் போட்டிகளும் டுபாயில் முறையே பெப்ரவரி 20 மற்றும் மார்ச் 2 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.
நடப்புச் சம்பியனான போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி பெப்ரவரி 19 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக ஆடும் போட்டி ஆரம்ப ஆட்டமாக அமையவுள்ளது. இதன் இரண்டாவது குழுவில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் போட்டிகள் தவிர்த்து மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானின் லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் இடம்பெற்றவுள்ளன.
இரு அரையிறுதிப் போட்டிகளும் மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதிக்கு மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருப்பதோடு மேலதிக தினமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா தகுதிபெறாத பட்சத்தில் இந்தப் போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறும்.