மாணவர்களுக்கு அனுப்பப்படும் ஆபாசக் காட்சிகள் – பெற்றோருக்கு அதிமுக்கிய எச்சரிக்கை
டெலிகிராம் செயலியில் ஆபாசமான காணொளிகளைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை பயமுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மேலதிக வகுப்பு மாணவர்களைக் கொண்ட டெலிகிராம் குழுக்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கும் சாருக தமுனுபொல,
“தற்போது டெலிகிராம் செயலி ஊடாக பிள்ளைகளை குறிவைத்து ஆபாசமான காட்சிகளைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்து பணம் பறித்தல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
இங்கே, பெரும்பாலும் மேலதிக வகுப்புக்காக தயாரிக்கப்பட்ட டெலிகிராம் குழுக்கள் மூலமே உங்கள் பிள்ளைகளுக்கு இதுபோன்ற ஆபாசமான காட்சிகள் அனுப்பப்படுகின்றன.
ஏஐ கருவி மூலம் பிள்ளைகளின் புகைப்படத்தை போலியாக தயாரித்து அவர்களுக்கு கிடைக்கச் செய்து பிள்ளைகளை மிரட்டுவதாக செய்திகள் வருகின்றன. இதனை பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது முக்கியம்.
அத்தகைய புகைப்படம் ஒரு குழுவிற்கு அனுப்பப்பட்டால், விரைவில் டெலிகிராம் கணக்கை முடக்குவது முக்கியம்.
AI புகைப்படத்தைப் பற்றி ஒருபோதும் பயப்பட வேண்டாம், உங்கள் உண்மையான புகைப்படங்களை வேறொரு கணக்கிற்கு அனுப்ப வேண்டாம்.” என்றார்.