பனிப்பொழிவினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் SBB யின் செயலியும் செயலிழந்ததால் பயணிகள் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர்.
சுவிட்சர்லாந்து முழுவதும் பனிப்பொழிவினால், ரயில் போக்குவரத்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் நேற்று SBB யின் செயலியும் இயங்காமல் கோளாறு என காண்பித்தது.
இதனால் தங்கள் பயணத்தை திட்டமிடுவதில் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். எனினும், SBB யின் செயலி நேற்று மாலை 6.30 மணிக்குப் பின்னர் இயங்கத் தொடங்கியுள்ளது.
அதிகளவு மக்கள் செயலிக்குள் நுழைந்ததால் சேவர் செயலிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பல ரயில் சேவைகள் பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக SBB அறிவித்துள்ளது.
இதனிடையே வீதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளதால், பஸ்சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையுடன், சூரிச்சில் பேருந்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
ட்ராம் சேவை ஒழுங்கின்றி இடம்பெற்றது.
பேர்ன், பாசல் போன்ற ஏனைய நகரங்களிலும் தரைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுப் போக்குவரத்துக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Solothurn நகரில் நேற்றிரவு 8 மணியுடன் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இன்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்படலாம் என SBBஅறிவித்துள்ளது.