இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்குத் தீர்வு கிடைப்பதில்லை. அத்துடன் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சமூகம் ஆகியவற்றை மையப்படுத்தி இனவாத கோசங்கள் எழுப்பப்படுவதும் வழமை.
ஒரு நாடு ஒரு மக்கள் என்று சிங்கள அரசியல் தலைவர்கள் கூறும் சந்தா்ப்பங்களில் எல்லாம் தங்கள் தனித்துவம் சுயமரியாதை மற்றும் மரபுவழி உரிமைகள் பற்றி தமிழர்கள் கவலைப்படுவதும் உண்டு.
இந்த நிலைமை ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் புதிய ஆட்சியிலும் தொடருகின்றது. இவர்கள் என்னதான் சோசலிசம் சமத்தும் என்று கூறினாலும் எதிர்கட்சிகளின் பரப்புரை குறிப்பாக மிகச் சமகாலத்தில் ஆளும் கட்சியாக இருந்து தற்போது எதிர்க்கட்சியாக மாற்றியுள்ள சில பிரதான கட்சிகள் மீண்டும் இனவாத முழக்கங்களை வெளிப்படுத்துகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மார் தட்டுகின்ற சோசலிசம் சமத்துவம் என்ற கோட்பாடு மிகவும் ஆபத்தானது என்று தமிழர்கள் கருதும் நிலையில், அந்த சோசலிசம் சமத்துவம் ஏதோ தமிழர்களுக்குத் தனிநாட்டை கொடுத்துவிடும் என்ற தொனியில் சில அரசியல்வாதிகள் புரளிகளைக் கிளப்புகின்றனர்.
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுக்க அநுர அரசாங்கம் எடுக்கும் முயற்சியை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ராஜபக்ச குடும்பம் கூக்குரலிட ஆரம்பித்துள்ளது.
முகநூல், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூகவலைளத்தளங்களில் இனவாத முழக்கங்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளன. ஆனால் இதனை ஜேவிபி உணர்ந்துகொள்ள வேண்டும். போரை மையப்படுத்தியும் 2009 இற்குப் பின்னரான சூழலில் புலிகள் மீள் உருவாக்கம் என்று கூறி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட விவகாரங்களில் ஜேவிபி ஆதரவாளர்களுக்கும் தொடர்பில்லாமலில்லை.
எவ்வாறாயினும், மிகப் பெரும் அறுதிப் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள நிலையில் ஜேவிபி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் பின்பற்றிய அதே நடைமுறையில் ஆளும் கட்சியாக இருந்து தற்போது எதிர்க்கட்சியாக மாற்றியுள்ள கட்சிகள் இனவாதத்தைத் தூண்ட முற்படுவது புதியதல்ல.
ஆனாலும் இனவாதத்தைத் தூண்டுவோர் பற்றிய எச்சரிக்கைகள் புலனாய்வுப் பிரிவினர், அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
கடந்த காலங்களில் அமைதியாக இருந்த சில மதத் தலைவர்கள், இனவாத அரசியல்வாதிகளும் இவ்வாறு இனவாதத்தை தூண்டும் செய்றபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் விமர்சிக்கப்பட்டிருந்த பதிவு காரணமாக இவ்விடயம் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பெரிய இராணுவ முகாம்கள் விடுவிக்கப்படும் என அவர் விடுத்திருந்த எச்சரிக்கையும் மேலும் சிந்திக்க தூண்டியுள்ளது.
மேலும், நாமல் ராஜபக்சவின் எக்ஸ் தள பதிவில் “இலங்கை 30 ஆண்டு கால போரை நிறைவுசெய்துள்ள நிலையில், இன்று அனைத்து மக்களுக்கும் நிம்மதியாக வாழ முடிந்துள்ளது. வடக்கில் அல்லது தெற்கில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அத்தியாவசியம் என அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள் மறக்கக் கூடாது ” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, நாட்டுக்கு எதிரான சக்திகளின் சதித்திட்டங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.
அதிகளவில் பேசப்பட்டு வரும் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தவறான பல பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்றன. இத் தொனியேஅபயதிஸ்ஸ தேரரின் கடுமையான கூறியிலும் வெளிப்படுகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கார்கோவளம் பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் நடத்தப்பட்டு வந்த இராணுவ முகாம் ஒன்று இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அகற்ற இராணுவ தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
8 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் காணி மூன்று உரிமையாளர்களுக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியாகும், மேலும் அரசாங்கத்தினால் சில காலமாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் இராணுவ முகாமை காணியிலிருந்து அகற்ற தீர்மானித்துள்ளனர்.
இப்பிரதேச மக்கள் யுத்தத்தின் போது மாகாணங்களை விட்டு வெளியேறிய பின்னர், வடமராட்சி கற்கோவளம் பிரதேசத்தின் பாதுகாப்பை பேணுவதற்காக இராணுவப் பிரிவுகளை வைத்திருப்பதற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது.
34 வருடங்களுக்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட இந்த காணியில் பல நிரந்தர கட்டிடங்களும் அதிகளவான நிரந்தர தோட்டங்களும் உள்ள நிலையில் முகாமின் கட்டிடங்களும் தோட்டங்களும் அப்படியே இருக்கும் நிலையில் இராணுவத்தினர் மற்றும் வாகனங்களை மட்டும் அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடர் போராட்டங்களின் பின்னர் இவ்வாறு வடக்கின் காணிகளை மீள ஒப்படைப்பது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு நடக்கும் ஒரு நல்ல விடயமாக எடுத்துக்கொள்ள முடியும்.
எனினும், இதனை இனவாதமாக மாற்றி, சில அரசியல் தலைமைகள் அரசியல் இலாபங்களை எதிர்ப்பார்ப்பது அம்பலமாகியுள்ளது.
தேர்தல் பிரசார மேடைகளில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் மீள வழங்குவது குறித்து தன்னுடைய அரசாங்கம் அவதானம் செலுத்தும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.
வடக்கு கிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில் அநுரவுக்கு கிடைத்த மக்கள் ஆதரவுக்காக அநுரா கடமைப்பட்டடுள்ளார். அதனால், காணிகள் மீள வழங்கப்படுவதை அரசாங்கத்தின் ஒரு தீர்வாக ஒப்பாசாரத்துக்காக ஏதேனும் சிறிய திட்டங்களை அவர் செய்ய முற்படக்கூடும்.
இதனை இனவாதமாக தென்பகுதியில் சிலர் பேசுகின்றனர்.
ஆகவே 76 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த பாரம்பரிய கட்சிகள் இனவாதத்தை இல்லாதொழிப்பதாக அரசியல் மேடைகளில் விவரண உரைகளை வழங்கியிருந்தாலும் கூட, இனவாதத்தை வைத்து அரசியல் தான் செய்து வந்தார்கள் என்ற முடிவுக்கு வர முடியும்.
மக்கள் மத்தியில் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்பது இதுவரையில் வந்த எந்தவொரு ஆட்சியாளரது குறிக்கோளாகவும் இருக்கவில்லை.
தற்போது புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் கூட மேடைகளில் “இனவாத அரசயிலுக்கு முற்றுப்புள்ளி” என தெரிவித்தாலும் அவரது சில தீர்மானங்களில் அது நிரூபிக்கப்படவில்லை.
வடக்கு கிழக்கு மக்கள் பல காலமாக தங்களுக்கான சுய நிர்ணய உரிமையைக் கோரி வருகின்றனர். இந்த புதிய அரசாஙகத்திலாவது இதற்கான ஒரு தீர்வு கிடைக்கப்பெறுமா என்ற கேள்வி இருந்தாலும் அதற்கு பல இனவாத அரசியல் தலைமைகள் குறுக்கே நிற்கின்றனர் என்பது மாத்திரம் பட்டவர்த்தனம்.