ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேனவும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு நாளை (19) வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ளது.
அதன்படி, மகாராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவகாசம் நாளை காலை உள்ளூர் நேரப்படி 6.30 மணியுடன் முடிவடைகிறது. ராணியின் உடல் உள்ளூர் நேரப்படி காலை 10.44 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லப்படும்.
நூற்றுக்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் பங்கேற்பு
இதன்போது அரச குடும்பத்தாரும் அணிவகுத்துச் செல்வார்கள். இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி உட்பட ராணியின் பேரக்குழந்தைகள், ராணியின் உடல் தற்போது வைக்கப்பட்டுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நேற்று இரவு சேவையில் சேர்ந்தனர்.
அரச சலுகைகள் துறந்து இளவரசர் ஹாரி இதன்போது அரச விமானப்படை சீருடை அணிந்து வந்தார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த காத்திருக்கும் மக்களை சந்தித்தனர்.
ஏழு தசாப்தங்களாக பிரித்தானியாவை வழிநடத்திச் சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 100 நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.