இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை சீர்குலைக்காது என உலகளாவிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தற்போதைய கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய ஆதரவு திட்டம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டங்கள், அவ்வாறே இருக்கும் என்று மூடிஸ் நம்புகிறது.
இருப்பினும், நிதி ஒருங்கிணைப்பை பராமரிப்பது சவாலானது என்றும், எதிர்காலத்தில் கடன் அபாயங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் மூடிஸ் எச்சரித்துள்ளது.
பொருளாதார தடைகளை புதிய நிர்வாகம் வழிநடத்துகையில் சில கொள்கைகளுக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் அல்லது பேரினப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அதன் திட்டத்தின் கீழ் இடம்பெறும் கடன் மறுசீரமைப்பு மற்றும் கட்டமைப்பு சீர்செய்தல் ஆகியவை அடங்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நிதி ஒருங்கிணைப்பை பராமரிப்பதில் உள்ள சவால்களுக்கு மத்தியில் சில கொள்கைகளுக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்கப்படலாம், இது கடன் அபாயங்களை குறுகிய காலத்திற்கு உயர்த்தலாம்” என்று மூடிஸ் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.