புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சா்வதேசத் தலைவா்கள் வாழ்த்து!
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல நாடுகளின் தலைவா்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனா்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று (22) இரவு இடம்பெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இதன்போது, இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளமைக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்திய உயர்ஸ்தானிகள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதேவேளை, புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் கணக்கில் கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக பணியாற்றுவேன் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் எக்ஸ் கணக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தைப் பாராட்டுவதாகக் கூறினார். மேலும், பொதுவான முன்னுரிமைகளில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
இதனிடையே, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த தானும் ஜப்பானிய அரசாங்கமும் நம்புவதாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவும் திரு.அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நெருங்கிய அண்டை நாடான மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று நட்புறவை வலுப்படுத்த இணைந்து செயற்படத் தயார் என்னும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பாகிஸ்தான் பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக எக்ஸ் கணக்கில் இது தொடர்பில் பதிவிட்ட எக்ஸ் குறிப்பில் கூறியிருந்தார்.