நாமல் வேட்பாளராக களமிறங்கியது ஏன்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் பல்வேறு கோணங்களில் இலங்கையில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் இந்திய புலனாய்வு சேவையான “ஹோ“ வின் தலையீடுகள் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கும் வகையில் மேற்குலக நாடுகள் பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவும் இலங்கையில் சமகால ஆட்சி தொடர்ந்தால் தமது திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்புகிறது.

என்றாலும், தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக பல கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்தன. குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு நாட்டில் வரலாறுகாணாத வகையில் அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டன.

ரணில் விக்ரமசிங்க ஆட்சியை தொடர வேண்டுமானால் இலங்கையில் அவருக்கு எதிராக வலுவடைந்துள்ள சக்திகளுக்கு கிடைக்கப்போகும் வாக்குகள் சிதறடிக்கப்பட வேண்டும்.

கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த பெரும்பாலான வாக்காளர்கள் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்க உள்ளதாக கூறிவருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்ட பொதுஜன பெரமுன ராஜபக்சர்களின் செல்வாக்கை நிறுத்திக்கொள்ளவும் அவர்களுக்கு எதிரான ஆட்சியாளர்கள் அதிகாரத்துக்கு வருவதை தடுக்கவும் பலமான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் தேவை எழுந்ததன் பிரகாரமே நாமல் ராஜபக்ச வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் சிங்கள மக்களிடையே தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ள ஆதரவு வட்டத்தை சிதைக்க முடியும் என்பதுடன், கணிசமான வாக்குகளையும் பெற்று சஜித் அல்லது ரணிலின் வெற்றியை உறுதிசெய்ய முடியும். நாமல் ராஜபக்ச களமிறக்கப்பட்டதன் பின்புலத்தில் இந்தியா இருக்கக் கூடுமென சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபல்யமான வேட்பாளர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் சார்ப்பில் களமிறக்கப்படாவிடின், தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு அலையை தடுக்க முடியாதென்ற பின்புலத்திலேயே நாமல் ராஜபக்சவை ராஜபக்சர்கள் களமிறக்கியிருக்க கூடுமெனவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு அழைக்கப்பட்டமை ரணில் மற்றும் ராஜபக்சர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காகவே என்ற அடிப்படையில் கடந்த காலத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனவே, இந்த தேர்தலில் றோ மற்றும் அமெரிக்காவின் தலையீடு அதிகமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin