பிரித்தானியாவில் சிறுமிகள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பரவிய வதந்தியால் நாட்டின் முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை வெடித்துள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள போதிலும், பொலிஸார் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி நடன வகுப்புக்குச் சென்று வந்த மூன்று சிறுமிகள் ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்திருந்தனர்.
மேலும், இந்த தாக்குதலில் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பெரியவர்கள் இருவரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடரிபில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர் குறித்து வெளியான தவறான தகவல்கள் தான் இந்த வன்முறை வெடிக்க பிரதான தொடக்கப்புள்ளியாகும்.
சிறுமிகள் கொல்லப்பட்ட வடமேற்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் (Southport) நகரில் ஜூலை 30ஆம் திகதி தொடங்கப்பட்ட தீவிர வலதுசாரி போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இந்த வன்முறையில் மசூதி ஒன்றும் சேதமாக்கப்பட்டது. இந்த வன்முறை தலைநகர் லண்டன் உள்ளிட்ட நாட்டின் முக்கிய இடங்களுக்கு பரவியுள்ளது.
இந்த வன்முறை தொடர்பில் இரண்டு முறை கோப்ரா கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தின் பின்னர் பேசிய பிரதமர் : ஸ்டார்மர் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
“கலவரங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கேற்கும் அனைவரும், இதில் பங்கேற்றதற்காக ஒரு நாள் நிச்சயம் வருத்தப்படுவீர்கள்.
இந்த நாட்டில் அனைவருக்கும் அமைதியாக வாழ உரிமை உண்டு. வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை பாயும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் பெற்றோர்கள் ரூவாண்டாவை சேர்ந்தவர்கள். அவருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எனினும், சவுத்போர்ட்டில் நகரில் சிறுமிகள் மீது தாக்குதலை நடத்தியர் படகில் வந்த அகதி எனவும், ஒரு இஸ்லாமியர் என்றும் போலிச் செய்திகள் பரவத் தொடங்கின.
ஒருவாராமாக நடத்துவரும் வன்முறை காரணமாக இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நான்காம் திகதி அகதிகள் தங்கியிருந்த விடுதியையும் போராட்டக்கார்கள் தாக்கியுள்ளனர். இந்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பவர்கள் அகதிகள் வெறுப்புணர்வை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக முஸ்லிம்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாகவே இந்த வன்முறை வெடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், பிரித்தானியாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் நிலையில் பாதுகாப்பு குறித்த அச்சமும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து புலம்பெயர் தமிழ் மக்களினால் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011 லண்டன் கலவரத்திற்குப் பிறகு பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான வன்முறை இதுவாகும். இதனால் பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.