சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில், மனுதாரர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்படி செல்லுபடியாகும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் அமைச்சுப் பதவிகளையும் இழக்க நேரிடும்.
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியதை எதிர்த்து இரண்டு தனித்தனியான வெளியேற்ற மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
தடையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்
கடந்த வருடம், ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மீது விதித்த தடையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருந்ததது.
குறித்த இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு கட்சியின் செயற்குழுவினால் தடை விதிக்கப்பட்டது.
எனினும், இருவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதையடுத்து, அந்த தடை நீக்கப்பட்டது.
இதன்பின்னர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி, அவர்களது கட்சி உறுப்புரிமையும் ரத்து செய்யப்பட்டது.
குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் நிலையில், அரசாங்கத்தில் இணைந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த தீர்மானத்தினை எடுத்திருந்தது.
இதன்பின்னர் கட்சியில் இருந்து நீக்கி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்வதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கட்சி யாப்பின் பிரகாரம் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது கட்சியின் செயற்குழுவிற்குரிய பொறுப்பு என்றும் இது கட்சித் தலைவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எனவே சஜித் பிரேமதாசவின் இந்த தீர்மானம் கட்சியின் விதிகளின்படி அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதியரசர்களான விஜித் மலல்கொட அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.