ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிக்க பெரேராவின் பெயர் முன்னிலையில் இருப்பதாக அக்கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ச, இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வெளிவுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்திருந்தார்.
அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சவுடனும் அவர் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார்.
இந்த சந்திப்பில் பேசப்பட்ட சில விடயங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவாரா என இதன்போது இந்திய தரப்பால் வினவப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள பசில் ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் பட்டியலில் தம்மிக்க பெரேரா முன்னிலையில் இருப்பதாக பதில் அளித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.