பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இனியும் ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை கவனத்தில் எடுக்காது இருக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதியிடம் சென்று கட்சியை விமர்சிக்கும் போது அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என கூற முடியாது எனவும் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொன்சேகா சுயாதீனமாக நின்று தேர்தலில் போட்டியிட்டு சுமார் 2000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றாலும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறினால் கடந்த காலங்களைப் போல குறைவான வாக்குகளைப் பெற வேண்டிய ஒரு சூழல் உருவாகும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடமிருந்தும் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தமக்குத் தேவையான விதத்தில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சரத் பொன்சேகா ஒரு பக்கம் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பதவியிலிருந்து தம்மை விலக்கக்கூடாத வகையில் வழக்கு தொடர்ந்து மறுபுறம் ஐக்கிய மக்கள் சக்தியை விமர்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான பின்னணியில், சரத் பொன்சேகா ரணிலுடன் இணைந்து விட்டாரா என்ற கருத்து அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தின் நேரத்தில் உரையாற்றுவது , ஐக்கிய மக்கள் சக்தியையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பது போன்ற செயற்பாடுகள் இதனை எடுத்துக்கூறுகின்றன.
எவ்வாறாயினும், “அரகலய“ வில் உருவாகி தற்போது ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து செயற்படும் மக்கள் போராட்ட இயக்கத்தில் இணைந்து சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.