இரவு பத்து மணிக்குப் பிறகு கொழும்பு நகரம் செயலற்றதாகி விடுகின்றது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முடங்கும் கொழும்பு நகரம்
பத்து மணிக்கு பின்னர் கொழும்பு நகரில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எதும் கிடையாது, நகரம் முடங்கிப் போவதாகவும் அவர் கூறினார்.
பெரும்பாலான மக்கள் உணவருந்துவதற்கும், பப்களில் நேரத்தை செலவிடுவதற்கும் நகரங்களுக்கு வருகிறார்கள். ஆனால் இங்கு கொழும்பு நகரில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. இங்கு மக்களுக்கு இரவு வாழ்க்கை இல்லை.
அனைத்து கடைகள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள் இரவு 10.00 மணிக்குப் பிறகு மூடப்படுகின்றன. எனவே, நாட்டில் இரவு பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
டொலர்களை கொண்டு வரும் முயற்சி
கொழும்பு நகரில் இரவு 10.00 மணிக்கு பின்னரும் பொழுதைக் கழிக்கும் நிலைமை ஏற்பட வேண்டும் , பொழுதுபோக்கிற்காக மக்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
நாட்டுக்கு டொலர்கள் கிடைக்காவிட்டால், எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் வீட்டு முற்றத்தில் எரிவாயு அல்லது எரிபொருளை தயாரிக்க முடியாது.
டொலர்களை கொண்டுவர சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். மன்னார் பிரதேசத்தை பிரதானமாக பொழுதுபோக்கு வலயமாக மாற்றலாம். டொலர்களை கொண்டு வருவதற்கு நாட்டில் பல விடயங்கள் உள்ளன என கூறினார்.