ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளின் பின் இன்று செவ்வாய்க்கிழமை வடகொரியாவுக்குச் சென்றார்.
வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடந்த 70 ஆண்டுகளாக நட்புறவு நிலவி வருகிறது.
என்றாலும், வடகொரியாவில் நிலவும் அரசியல் நிலைமைகளின் காரணமாக ரஷ்ய தலைவர்கள் அங்கு செல்வதில்லை.
இறுதியாக புடின் முதல்முறை ஜனாதிபதியாக இருந்த தருணத்தில் வடகொரியாவுக்குச் சென்றிருந்தார்.
தற்போது நான்காவது முறையாக பதவியேற்றப்பின் மீண்டும் சென்றுள்ளார். கடந்த பல ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு வலுப்பெற்றுள்ளது பின்புலத்தில் புடினின் இந்த பயணம் அமைந்துள்ளது.
வடகொரிய தலைநகர் Pyongyang (பியாங்யாங்) இல் புடின் ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை சந்தித்தித்து கலந்துரையாடினார்.
மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லாத வடகொரியாவுடன் இணைந்து வர்த்தகம் புரியவும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்றைய பயணத்தில் உறுதிபூண்டுள்ளார்.
சமத்துவம், இருதரப்பு மரியாதை மற்றும் நன்னம்பிக்கையின் அடிப்படையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருநாடுகளும் நல்லுறவையும் பங்களாத்துவத்தையும் வளர்த்து வருவதாக புடின் வடகொரியாவுக்கு வருகைதர முதல் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“வர்த்தகம், இருதரப்பு குடியேற்றங்கள் போன்ற மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத அம்சங்களில் மாற்று வழிகளை உருவாக்குவோம். ஒருதலைப்பட்சமான சட்டவிரோதக் கட்டுப்பாடுகளை ஒன்றிணைந்து எதிர்ப்போம்.
அதேநேரம், யூரேசியாவில் சமமான மற்றும் பிரிக்க முடியாத பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவோம்,” என ரஷ்ய ஜனாதிபதி புடின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்காக வடகொரியாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்காவின் அழுத்தம், இராணுவ அச்சுறுத்தல்களுக்கு இடையே தன்னைத் தானே தற்காத்துக்கொள்ள பியோங்யாங் எடுத்துவரும் முயற்சிகளுக்கு ரஷ்யாவின் ஆதரவு உண்டு என்றும் புடின் தெரிவித்துள்ளார்.