திருமண சமத்துவச் சட்டத்தின் இறுதி வாசிப்பை நிறைவேற்றியது தாய்லாந்தின் செனட் செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம் நேபாளம் மற்றும் தைவானைத் தொடர்ந்து ஒரே பாலினத்தவர்களை அங்கீகரிக்கும் ஆசியாவின் மூன்றாவது நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.
இந்த சட்டம் ஏறக்குறைய அனைத்து மேலவை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரச ஒப்புதலை பெற்றப்பின்னர் வர்த்தமானி வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குப் பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.
இதனை LGBTQ+ சமூக சட்டத்தரணிகள் வரவேற்றுள்ளனர். தாய்லாந்து ஏற்கனவே LGBTQ+ கலாச்சாரம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்ற நாடாகும்.
எவ்வாறாயினும், “இது மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் தாய்லாந்தின் தலைமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று திருமண சமத்துவத்திற்கான சிவில் சொசைட்டி கமிஷன், ஆர்வலர்கள் மற்றும் LGBTI+ தம்பதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான LGBTQ+ சமூகத்தினர் மற்றும் ஆர்வலர்கள் பாங்காக் வீதிகளில் அணிவகுப்பு நடத்தியிருந்தனர்.
மேலும் பிரைட் மாதத்தைக் கொண்டாடும் வகையில் வானவில் வண்ணங்களை கொண்ட ஆடை அணிந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அவர்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.