பதவி விலகியதற்கான காரணத்தை அறிவித்த மைத்திரி

கட்சி மற்றும் அதன் உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்காகவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் தேசிய சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தலைவர் பதவியை வகிக்கும் தகுதியானவர் இல்லை. அதன் காரணமாகவே விஜயதாச ராஜபக்சவை கட்சியின் பதில் தலைவராக நியமித்துள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பிறப்பித்த காரணத்தால் நான் எனது பதவி விலகவில்லை.

நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட முடியாது. அத்தகைய வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் ஏற்காது.இதன் காரணமாகவே பதவி விலகினேன்.

கட்சியின் பதில் தலைவராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச பதவியேற்ற போது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனது நீதிமன்ற வழக்குகளுக்கு நிதி கிடைக்காததால் கட்சியை விற்றேன் என்றும் கூறினார்கள். அவர்களின் கடந்த காலத்தை நான் வெளிப்படுத்தினால்,அவர்கள் ஓடிவிட வேண்டும். அவர்கள் எந்த வெட்கமும் இல்லாமல் தலைவர் பதவியை தக்கவைக்க முயற்சிக்கிறார்கள்” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin