இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பாரிய எதிர்ப்பார்ப்புகள் நாளுக்கு நாள் எழுந்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் இரு தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தது.
தமிழர் தரப்பு பொது வேட்பாளர்
தமிழர் தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தொடர்பிலான விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
இவ்வாறு பல விடயங்களாலும் அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் தற்போதைய நிலவரங்களின் படி, தேர்தல்கள் இடம்பெறுமா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
இந்நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்வது தொடர்பில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் (Jaffna Chamber of Commerce) தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடன் சந்திப்பு
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு யாழ். வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இதில், சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக கலந்துகொண்ட பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் யாழ். வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட்ட முக்கிய உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
தமிழ் தரப்பு பொது வேட்பாளருக்கான அவசியம்
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான நோக்கம் மற்றும் அதன் அவசியம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
சந்திப்பின் ஆரம்பத்திலேயே பொது வேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வர்த்தக சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
இது பொது வேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் சமூக நிறுவனங்கள் மத்தியிலும் தன்னியல்பாக தோன்றியுள்ளமையின் வெளிப்பாடு என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ் யாழ். வர்த்தக சங்கமும் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழ் கட்சிகள் தொடர்பில் சிங்கள தலைவர்கள்
எவ்வாறாயினும், தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின்மை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீ.வீ.விக்னேஸ்வரிடம் கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளுக்காக பல அரசியல் தலைவர்களும் பல முயற்சிகளில், பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல தரப்பட்ட கோரிக்கைகள் சிங்கள அரசியல் தலைவர்களிடம் முன்வைக்கப்பட்டாலும் தத்தமது அரசியல் இலாபங்களுக்காகவே அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டால் தமக்கு என்ன நிலை என்பதையும் சிங்கள அரசியல் தலைவர்கள் நன்கு அறிவார்கள்.
ஆக, அவற்றை மையப்படுத்தியே காய்நகர்த்தி வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.