ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறுவாரா சரத் பொன்சேகா?

முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த கட்சியுடனும் சேராமல் சுயேட்சை வேட்பாளராக அவர் போட்டியிடவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவை சரத்பொன்சேகா பெற்றுள்ளார் எனவும், ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்ததைகள் தொடர்கின்றன எனவும் சரத் பொன்சேகாவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சரத்பொன்சேகா தனது தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் அற்ற நாடு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரகலயவின் போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவு வெளியிட்ட சரத்பொன்சேகா இந்த சந்தர்ப்பத்தில் தனக்கு கிடைத்த ஆதரவை பயன்படுத்த முயல்வார் எனவும் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதேவேளை, தனது பிரச்சாரத்தின் போது அவர் புத்திஜீவிகள் பிரபல பிரமுகர்களுடன் இணைந்து செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் பிரசார காலத்தில் சரத்பொன்சேகா யுத்தம் குறித்த நூலை வெளியிடவுள்ளதாகவும், இந்த நூலில் யுத்தம் குறித்த பல முக்கிய விடயங்கள் இடம்பெற்றிருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதியான முன்னாள் இராஜதந்திரி ஒருவர் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கான வேண்டுகோளை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin