மத்திய கிழக்கு நாட்டில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பெண் ஒருவர் தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் அயல் வீட்டு பெண்ணை நம்பியதால் இழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், சுமார் 13 லட்சம் பணத்தை குறித்த பெண் இழந்துள்ளார்.
பொகவந்தலாவ, எல்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான பெண் ஒருவர், வறுமையின் காரணமாக 17.05.2022 ஆம் ஆண்டு குவைத் நாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
இந்நிலையில், தனது மாதாந்த சம்பளத்தை ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கி கிளையில் வைப்பிலிட்டு வந்துள்ளார்.
தான் வெளிநாடு செல்லும்போது அயல் வீட்டுப் பெண்ணிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வங்கிப் புத்தகத்தை ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
தான் பணியாற்றிய இரண்டு ஆண்டுகள் காலப்பகுதியில் குறித்தப் பெண் தனது வங்கிக் கணக்கில் 1,344,859 ரூபாய் வைப்பு செய்துள்ளார்.
இந்நிலையிலேயே, குறித்தப் பெண் அண்மையில் நாடு திரும்பியுள்ளார்.
தனது வீட்டை புனரமைத்துக்கொள்வதற்காக கடந்த மாதம் 28ஆம் திகதி பணத்தை பெற்றுக்கொள்வதற்காக அவர் வங்கிக்கு சென்றுள்ளார்.
எனினும், தனது வங்கிக் கணக்கில் வெறும் 1046 ரூபாய் மட்டுமே இருப்பதைக் கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது, ஒவ்வொரு மாதமும் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
விசாரணையில் அயல் வீட்டுப் பெண்ணே பணத்தை எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
வெவ்வேறு வங்கிக் கிளைகளில் இருந்து அவ்வப்போது பணம் எடுத்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் வங்கி கணக்கில் இருந்து பணம் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.