தேர்தல்களுக்கான நாட்கள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கில் வெவ்வேறான அரசியல் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை வெகு விரைவில் அறிவிப்பதாக பசில் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனைக்கு அமைவாக பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களிடம் கையொப்பங்களை சேகரிக்கும் திட்டத்தை கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?
20வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றம் தனது ஆயுள்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்ததும் ஜனாதிபதியால் அதனை கலைக்க முடியும்.
அரசயலமைப்பின் 70ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
20ஆவது திருத்தத்தின் மூலம் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் தனது ஆயுட்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்துள்ளதால் எவ்வேளையிலும் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் பொதுத்தேர்தல்களை நடத்தலாம் என அரசியல் வட்டாரங்கள் அண்மைய காலங்களாக தெரிவித்து வருகின்றன.
பசிலின் திட்டம்
இவ்வாறான பின்னணியிலேயே, பசில் ராஜபக்ச கையொப்பங்களை சேகரிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கடந்த 9ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற ஆறாம் கட்ட கலந்துரையாடலின் பின்னர் பசில் ராஜபக்ச இந்த கையொப்பம் சேகரிக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
அரசியல் இலாபம்
முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினால் ரணிலுக்கு அல்லது மொட்டுக் கட்சிக்கு அதில் வெற்றிப் பெற முடியாது எனவும் அதனால் ஏற்படக்கூடிய சிறிதளவேனும் பாதகத்தை தவிர்ப்பதற்காக முதலில் பொதுத் தேர்தலை நடத்துமாறு குறித்த கலந்துரையாடலில் பசில் ராஜபக்ச, ரணிலிடம் எடுத்துரைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும், அதற்கு ரணிலிடமிருந்து நேரான ஒரு பதில் கிடைக்கவில்லை எனவும் அவருடைய தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாதத்தில் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசில் ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தாார்.
ரணிலின் இந்த பதில், நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரி மொட்டுக்கட்சியின் உறுப்பினர்களிடம் கையொப்பம் சேகரிக்கும் திட்டத்துக்கு ஆரம்பமாக அமைந்துள்ளது.