இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அண்மைக்காலமாக தொழில் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு வெளியேறும் இலங்கையர்களில் 41 வீதமானவர்கள் தொழில் வல்லுநர்கள் அல்லது ஏதோ ஒருவகையில் திறமைகளைக் கொண்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இருந்து தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்விமான்கள் வெளியேறுகின்றமை பெரும் சவாலான விடயம் மாத்திரமல்ல சாபக்கேடான விடயமாகவும் பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறு இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் பல்வேறு முரண்பாடான தரவுகளும் பகிரப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகிறது.
இதன்படி, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 இலட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சில செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரலவை மேற்கோள் காட்டி இணையதளம் ஒன்று முதலில் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகின்றது.
இந்த நிலையில், கல்விமான்களின் வெளியேற்றம் குறித்த செய்தி தொடர்பில் factseeker உண்மை நிலைமைகளை ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
இதன்படி, கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியதை உறுதிப்படுத்தும் தரவுகள் அல்லது வழி இல்லாத காரணத்தினால், இது குறித்து பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரலவிடம் factseeker வினவியுள்ளது.
இந்த நிலையில், 25 இலட்சம் கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த இரண்டு வருடங்களில் பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளுக்குச் சென்றவர்களின் தொகையை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் சமர்ப்பித்ததாகவும், ஆனால் சில ஊடகங்கள் குறித்த செய்தியின் அர்த்தத்தை மாற்றி வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் இலங்கை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தாக்கத்தை எதிர்கொண்டிருந்ததுடன், 2022 ஆம் ஆண்டில் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்தது.
இதற்கமைய 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை உயரிய மட்டத்தை வெளிப்படுத்துகின்றது.
மத்தியவங்கி தரவுகளின் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்திரம் பல்வேறு காரணிகளின் நிமித்தம் 1,437,607 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமை தெளிவாகின்றது.