“புலிகளை தோற்கடித்தவர்கள் கூலிப்படையாக செயற்படுகின்றனர்”: சவேந்திர சில்வா

வெளிநாடுகளில் கூலிப்படையாக இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் போலிப் பிரச்சாரங்களில் இருந்து விலகியிருக்குமாறு இலங்கை படை வீரர்களிடம் பாதுகாப்புப் படைகளின் பிரதானி (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் – ரஷ்யப் போரில் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் கூலிப் படைகளாக இணைந்து செயற்படுவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன், இந்தப் போரில் இலங்கையர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக சம்பளம், குடியுரிமை, உள்ளிட்ட போலி வாக்குறுதிகளால் அழைத்துச் செல்லப்படும் இவர்கள் அங்கு கூலிப்படையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, சவேந்திர சில்வா இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“ஒரு காலத்தில் எம் தேசத்தின் பெருமையாக இருந்த இந்த படைவீரர்கள் இன்று போலியான வாக்குறுதிகளுக்கு அடிபணிந்துள்ளனர். போர் வீரர்கள் மற்றும் தேசபக்தர்கள் என்று வரையறுக்கும் விழுமியங்களையும் கைவிட்டுள்ளனர்.

இலங்கையின் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் என்ற வகையில், கடமை, மரியாதை மற்றும் தாய்நாட்டிற்கான விசுவாச உணர்வு ஆகியவற்றால் நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்.

ஆனால் இன்று பணம் மற்றும் நிலையற்ற பெருமைக்காக தங்களின் விசுவாசத்தை கைவிடும்படி தூண்டப்படுகின்றனர். கூலிப்படை என்பது உன்னதமாக போர் நடவடிக்கை அல்ல. மாறாக இது ஆபத்தான பாதையாகும்.

இந்தப் பாதையில் நடப்பவர்கள் மூலம் எமது மதிப்பிற்குரிய இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அபாயம் உள்ளது.

உலகின் மிகவும் பயங்கரவாத அமைப்பை தோற்கடித்த இராணுவத்தின் உறுப்பினர்களாக, நாம் எமது தொழிலின் மரியாதையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin