பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள உயர்வு: வெளியானது வர்த்தமானி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் உயர்வை வழங்கும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

33(1) (அ) ஊதிய சபைகள் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 136) பிரிவின் கீழ் தொழில் அமைச்சரின் உத்தரவின் மூலம், தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கொட்டகலையில் நடைபெறும் இதொகாவின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபா கிடைக்கப்பெறும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் மறந்துவிடவில்லை. லயன்கள் காணப்படும் பகுதிகள் கிராமங்களாக மாற்றப்படும். அப்போது கிராமங்களுக்குரிய சலுகைகள் தோட்டப்பகுதிகளுக்கு கிடைக்கப்பெறும்.

பெருந்தோட்ட மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் அவர்கள் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பு வழங்கினர்.” என்றார்.

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவும், விசேட கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இதன்படி ஒரு நாளுக்குரிய மொத்த சம்பளமாக 1700 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin