இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி விவாதம் அரசியல் களத்தில் உருவாகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை தண்டிப்போம் என அரசியல் மேடைகளில் வாக்குறுதி அளித்தவர்கள் இன்று மௌனமாக உள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பில் கொழும்பு பேராயர் மல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். அதன் அடிப்படையிலேயே நீதியான விசாரணைகளை வேண்டுமென கருதும் கத்தோலிக்க மக்கள் அதற்கு சர்வதேச விசாரணையே பொறுத்தமாக இருக்குமென கூறுகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்க கடந்த ஐந்து வருடங்கள் போதுமானவை. ஆனால், அது நடக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் எமது நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வதேச விசாரணையை சம்பந்தப்பட்ட தரப்பினர் கோர வேண்டியதில்லை.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் 14 நாட்கள் 76 மணித்தியாலங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் 150 மில்லியன் ரூபாயை நாடாளுமன்ற விவாதத்துக்காக செலவிட்டுள்ளது.
இந்நிலையில், பல வாத பிரதிவாதங்கள் மத்தியில் பேராயர் மல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை பொய் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”இது நாட்டில் முதலாவதாக நடைபெற்ற மத ரீதியிலான தாக்குதல் அல்ல. தலதா மாளிகை, ஸ்ரீமஹா போதி, காத்தான்குடி தேவாலயம், அரந்தலாவை பிக்குகள் படுகொலை போன்றவற்றுக்கும் வெவ்வேறான தீவிரவாத செயற்பாடுகள் இடம்பெற்றன.
பல வருடங்களாக பௌத்த மக்கள் இதனை இழுத்தடிக்கவில்லை. எனினும், தீவிரவாதத் தாக்குதல் என அடையாளம் காணப்பட்டது. யுத்தம் நிறைவுசெய்யப்பட்டது.
இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் மீதோ, இதனை தடுக்கத் தவறியவர்கள் மீதோ குற்றச்சாட்டுகளை முன்வைக்காது எங்கோ ஒரு மூலையிலிருந்த கோட்டாபய ராஜபக்ச மீது குற்றச் சாட்டுக்களை முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பேராயரின் அண்மைய ஊடக சந்திப்பின் போது அனுர அல்லது சஜித்துக்கு வாக்களிக்குமாறு கத்தோலிக்க மக்களுக்கு தெரிவிக்கிறார். ஒரு மதத்தலைவர் எப்படி அவ்வாறான ஒரு கருத்தை தெரிவிக்க முடியும்?
மதத் தலைவர்கள் என்பவர்கள் தங்களுடைய மதத்தை போதிக்கும் விடயங்களிலே ஈடுபட வேண்டுமே தவிர அரசியலை போதிக்க கூடாது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களியுங்கள் என பேராயர் கூறுகிறார். தற்கொலை குண்டுத் தாக்கதாரிகளுடன் தொடர்புடைய கட்சிக்கு வாக்களியுங்கள் எனக் கூறுமளவுக்கு பேராயர் மாறியுள்ளார்.
சிங்கள மக்கள் மீது தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற போது சிங்கள ஆட்சியாளர்கள் அதனை பயன்படுத்தி வாக்குகளை சேகரிக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாரிய விடயங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிறைவேற்றியுள்ளார்.
பேராயரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கோட்டாபய நிராகரித்துள்ளார். ஒரு மதத் தலைவராக அவர் இவ்வாறு பொய்யுரைக்கக் கூடாது. அவர் அரசியலில் நுழைய தேவையில்லை.” என தெரிவித்துள்ளார்.