ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தால் ரணிலுக்கு முக்கிய பதவி

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முக்கிய பதவியொன்றை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க கூறுவது போல் ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு வேட்பாளரும் அக்கட்சியில் இணையப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராக முன்நிறுத்த உள்ளது. இதற்கான அங்கீகாரமும் அக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டும் விட்டது.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களை இணைத்து பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க ரணில் விக்ரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களுடன் அவர் பேச்சுகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும், இதுவரை ரணிலுக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையான அறிவிப்பை எவரும் விடுக்கவில்லை.

ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் 14 பேர் ஐ.தே.கவில் இணைய உள்ளதாகவும் மே தினக் கூட்டத்தில் இவர்களில் சிலர் மேடையேற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

என்றாலும், இதனை ஐக்கிய மக்கள் சக்தி மறுத்துள்ளதுடன், தோல்விக் கூட்டணியில் எவரும் இணையப் போவதில்லையெனவும் கூறியுள்ளனர்.

இவ்வாறான பின்புலத்தில்தான் அசோக அபேசிங்க ரணிலை தமது தரப்புடன் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin