தெற்கை மையமாகக் கொண்ட பிரபல அரசியல் குடும்பமொன்றின் மூலம் வெளிப்படைத் தன்மையற்ற முறையில் தலைநகர் கொழும்பில் 70 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான காணிகளை விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் மெளபிம என்ற சிங்கள நாளதழ் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் நிதிச்சலவை சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் விசாரணைகளை நடத்தக் கோரி இலஞ்சம்-ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் வாரத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க மெளபிம பத்திரிகைக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் கோட்டை, தூவ பாதையில் 54 பேர்ச்சஸ் காணியை விலைக்கு கொள்வனவு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த அதிசொகுசு வீடுக் காணியுடன் இணைந்து காணப்படும் நான்கு காணிகளையும் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்துக்கான சாட்சிகள் தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2006 ஆம் ஆண்டு நிதிச்சலவை சட்டத்தின்படி, இந்த காணிகளின் உரிமையாளர்கள் யார்? இந்தக் காணிகள் யாருடைய பெயரில் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டன என்பதை உடனடியாக ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு உள்ளான கோட்டை தூவ பாதையில் 54 பேர்ச்சஸ் காணிக்கு மேலதிகமாக அதன் அருகில் 18 பேர்ச்சஸ் (1 பேர்ச்சஸ் 4 மில்லியன் ரூபாய் அடிப்படையில்) 72 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியும், 54 பேர்ச்சஸ் (1 பேர்ச்சஸ் 4 மில்லியன் ரூபாய் படி) 216 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியும், 18 பேர்ச்சஸ் (1 பேர்ச்சஸ் 4 மில்லியன் ரூபாய் படி) 72 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியும், 30 பேர்ச்சஸ் (1 பர்சஸ் 3.5 மில்லியன் ரூபாய்படி) 105 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணியும் இவற்றுள் உள்ளடங்குவதாக அவர் விபரங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதன்படி, இதற்கு முன்னர் விலைக்கு வாங்கிய 54 பேர்ச்சஸ் காணியில் கட்டப்பட்ட வீட்டில், பாதுகாப்பு சேவைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குளிரூட்டப்பட்ட அறைகளுள் 12 நாய்களை சொகுசாக வளர்த்து வருவதாகவும் நீச்சல் தடாகம் உட்பட அதிசொகுசு வீடொன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.