நாட்டு பிரஜைகள் மற்றும் குடியிருப்பாளர்கள் தமது பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்றுவதை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இதன்படி, நபர் ஒருவரின் முன்னைய பெயரை அல்லது பாலினத்தை அவரது அனுமதியின்றி வெளிப்படுத்துவதற்கு எதிராக மிகப் பாரிய அளவிலான அபராதம் விதிக்கப்படவுள்ளது.
ஜெர்மனில் முன்னதாக நபர் ஒருவர் தமது பதிவு செய்யப்பட்ட பாலினத்தை மாற்றுவதற்கு மருத்துவரின் சான்றிதழ் மற்றும் குடும்ப நீதிமன்றத்தின் ஒப்புதல் அவசியமாக காணப்பட்டது.
ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அமைய 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலாரும் தமது விருப்புக்கேற்ப பாலினத்தை மாற்றிக்கொள்ள முடியும்.
அத்தகைய மாற்றத்திற்கான கோரிக்கையை விடுத்ததில் இருந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் விண்ணப்பதாரர்கள் பதிவு அலுவலகத்தில் நேரில் முன்னிலையாக வேண்டியுள்ளது.
அதேநேரம், நபர் ஒருவரின் முந்தைய பெயர் அல்லது சட்டப்பூர்வ பாலினத்தை வேண்டுமென்றே அல்லது தீங்கு விளைவிக்கும் வகையில் வெளிப்படுத்தினால் 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சட்டத்தில் சட்ட நடவடிக்கைகள் கருதி சில விதிவிலக்கு காணப்படுகின்றது.
இதன்படி, 14 முதல் 18 வயத்துக்கு இடைப்பட்டவர்கள் பாலினத்தை மாற்றும் போது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
அதே சமயம் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் அறிவிக்க வேண்டியுள்ளது.
விண்ணப்பம் கையளிக்கப்பட்டு 12 மாதங்களுக்குள் எந்த மாற்றத்தினையும் மேற்கொள்ள முடியாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.