அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று (12.04.2024) வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல், காசாவில் ஹமாஸுடன் போரில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் மீதான நேரடித் தாக்குதலின் அரசியல் அபாயங்களை ஈரான் மதிப்பிட்டு வருவதாக அவர் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள.
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த முதலாம் திகதி தாக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் தூதரகத்தில் இருந்த ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியதுடன், குறித்த தாக்குதலுக்கு நிச்சயம் பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும் எனவும் சபதம் செய்துள்ளது.
ஈரானின் குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
டமாஸ்கஸில் நடந்த தாக்குதல், இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் போராளிக் குழுக்களை ஆதரித்த ஈரானிய இராணுவ அதிகாரிகளை இலக்காகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் மீதான உடனடி தாக்குதலின் அபாயத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, அங்குள்ள அமெரிக்கர்களுக்கான பயண ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.