சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 13 இலட்சத்தை தாண்டியள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சொந்த ஊரை நோக்கி பயணிக்கும் பொது மக்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணையம், இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து திணைக்களம் இணைந்து போக்குவரத்து திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் நயோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த போக்குவரத்து திட்டத்தின் கீழ் புத்தளம், தம்புள்ளை, கண்டி, காலி, ஹைலெவல் வீதி ஆகிய நாளாந்தம் கொழும்பிலிருந்து பேருந்துகள் வெளியேறும் பிரதான பாதைகள் ஐந்திலும் பேருந்து போக்குவரத்து 700 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹைலெவல் வீதியின் மாகும்புர, கடவத்தை, மத்திய பேருந்து நிலையம், பெஸ்டியன் வீதியிலிருந்து பேருந்து போக்குவரத்து வழமையை விட 150ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெஸ்டியன் வீதியில் பேருந்து தரிப்பிடத்துக்கு வருகைத் தரும் அங்கவீனர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பயணிகளின் தேவைக்காக நீர் மற்றும் முதலுதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சேவைகளை பயன்படுத்தும் போது ஏதேனும் இடையூறுகள் இருப்பின் அது தொடர்பில் 071 25 95 555 எனும் இலக்கத்துக்கு வாட்ஸ் -அப் குறுஞ்செய்தி மூலம் புகார் வழங்க முடியும் என தலைவர் நயோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக , ரயில்-1971, போக்குவரத்து ஆணையம்-1955 போன்ற அவசர இலக்கங்களினூடாக குறித்த சேவைகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.