ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்திக் பாண்டியா, சீனியர் வீரரும் பயிற்சியாளருமான மலிங்காவை அவமதித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பல பிரச்சினைகள் நிலவி வருகிறது.
ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்று அணியில் இருக்கும் சில வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல் அந்த அணியில் உள்ள பயிற்சியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா இருக்கிறார்.
மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு ஜாம்பவனாக பார்க்கப்படுகிறார். அந்த அணி ஐந்து முறை கோப்பையை வென்று இருக்கிறது என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம். இப்படி இருக்க அவர் பயிற்சியாளராக இருக்கும் போது மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் அணியை 277 ரன்கள் அடிக்கவிட்டது.
பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் நேற்று முன் தினம், ஆட்டம் முடிந்தவுடன் மும்பை அணி தோல்வியை தழுவிய பிறகு வீரர்களும் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் மலிங்கா ஹர்திக் பாண்டியாவை கட்டி அணைக்க முயன்றார்.
ஆனால், ஹர்திக் பாண்டியா அவரை கையால் தள்ளிவிட்டு அவரைக் கண்டு கொள்ளாமல் சென்றார். இதனால் அவமானப்பட்ட மலிங்கா பெரியதாக காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இப்படி வெளிப்படையாக என்ன பிரச்சனை இருக்கிறது. மலிங்கா போன்ற ஒரு ஜாம்பவானை ஹர்திக் பாண்டியா ஏன் அவமானப்படுத்தினார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.