இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதலானது மிகவும் கொடூரமான கொலைச் சம்பவம். அப்பாவி மக்கள் இலக்கு வைத்து தேவாலயங்களில் கொல்லப்பட்ட இரத்த கரைபடிந்த வரலாறு.
உண்மையான சூத்திரதாரிகளை கண்டறியும் வகையில் பல்வேறு விசாரணைகள் இடம்பெற்ற போதிலும் இதுவரை அதனை செய்வித்தவர்கள் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை.
தொடர்ச்சியாக இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றது. இந்த நிலையில் குண்டுத் தாக்குதல் நடைபெற்று ஐந்து வருடங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால வாக்குமூலம்
தாக்குதல் நடைபெற்ற போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தமக்குத் தெரியும் என இரண்டு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். தமக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் பட்சத்தில் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்ற தகவலைத் தருவதாக தெரிவித்திருந்த அவர், இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆறு மணி நேரம் அவரிடம் விசாரணை இடம்பெற்றுள்ளது.
வெளிநிநாட்டு நிபுணர்கள்
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட குழுவினைக் கொண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உண்மையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை அவரே சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு தரப்பினரை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறிய தென்னிலங்கை இன்று தமது அரசியல் ஆதாயத்திற்காக சர்வதேச குழுவை அழைக்க முற்படுகின்றது.
அப்படி என்றால் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவமும், ஆட்சியாளர்களும் இழைத்த குற்றங்களுக்கு என்ன தீர்ப்பு என்ன நிவாரணம்? இங்கு ஓரவஞ்சகமாகவே தமிழ் மக்கள் நடத்தப்படுகின்றனர்.
தமக்கு வந்ததால் இரத்தம் தமிழ் மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்ற நகைச்சுவை தான் ஞாபகத்திற்கு வருகின்றது.தென்னிலங்கையே தன்னில் நம்பிக்கை இல்லாது இருக்கும் போது தமிழ்த்தரப்பை நம்பச் சொல்லி எப்படி வலியுறுத்த முடியும்?
நாட்டின் சகல மக்களுக்கும் பொதுவானதே அரசியலமைப்பு. அதன் விதிகள் மக்களை ஒழுங்குபடுத்தி ஆள்வதற்கே அன்றி பிரித்துவிட்டு அநீதி இழைப்பதற்கு அல்ல. ஆக எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையினை வெறுமனே ஒரு கருத்தாக விட்டுவிட முடியாது.
அதனை கருத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கு எதிரான போர்க் குற்றம், மனித உரிமை மீறல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நியாயத்தைத் தேடுவதற்கு சர்வதேசம் முன்வர வேண்டும்.