இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அதுவும் மருத்துவ துறையை பொறுத்தவரையில் கணிசமான வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று தொழில்புரிவதனை அவதானிக்க முடிகிறது.
இந்த நிலையில், 400 இற்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிவதாக சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 100 தாதியர்களைக் கொண்ட குழுவொன்று நேற்றைய தினம் (15) வெள்ளிக்கிழமை சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரின் சுகாதார அமைச்சின் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் கீழ் ஒரே நேரத்தில் சிங்கப்பூருக்கு அனுப்பிவைக்கப்படும் பாரியளவிலான தாதியர்களைக் கொண்ட குழு இதுவாகும்.
தற்போதைய நிலையில், இலங்கையைச் சேர்ந்த தாதியர்கள் இரண்டு வருட காலத்திற்கு சிங்கப்பூரின் சுகாதார துறையில் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தாதியர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இருவழி விமான பயண சீட்டுகள், தங்குமிட வசதி என்பவற்றை இலவசமாக வழங்கியுள்ளது. அத்துடன், சம்பளத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு நபருக்கும் 1,000 சிங்கப்பூர் டொலர் இடமாற்ற கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் இருந்து 2,528 தாதியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.
அத்துடன், இந்த வெளியேற்றம் காரணமாக சுகாதாரத்துறையில் கடுமையான நெருக்கடி உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.