தமிழர் பிரதேசங்களில் திரிபுபடுத்தப்படும் வரலாறுகள் – எது நல்லிணக்கம்?

இலங்கைத்தீவில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சிங்கள-பௌத்த தேசியவாதமானது தற்போது சகிப்புத் தன்மையற்ற ஒரு தீவிரவாத சித்தாந்தமாக கருதப்படுகிறது.

2015 இற்குப் பின்னரான சூழலில் கொழும்மை மையமாகக் கொண்ட தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட பிரதான அரச திணைக்களங்கள் மூலமாக பௌத்த மயமாக்கல் சட்டரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத்தீவின் இன மோதலுக்கு வழிவகுத்த முக்கிய காரணிகளுள் பௌத்த மயமாக்கல் பிரதானமானது. அத்துடன் சிங்கள- பௌத்த நாடு என்பதை நிரூபிக்க பல சான்றுகளையும் புதிது புதிதாக உருவாக்கியும் வருகின்றனர்.

தமிழ் மன்னன் என இதிகாசங்கள் சான்று பகிரும் இராவணனையே சிங்கள மன்னனாகச் சில மாதங்களுக்கு முன்னர் சித்தரிக்க முற்பட்ட சம்பங்களும் உண்டு.

இப் பின்புலத்திலேயே இலங்கைத்தீவின் தொல்லியல் திணைக்களம், ஆரிய வம்சத்தினராகிய சிங்கள பௌத்தர்களே ஆதிக் குடிகள் என நிறுவுவதை மாத்திரமே தனது இரகசிய வேலைத்திட்டமாக கொண்டுள்ளதாக தமிழ் சிவில் சமூக அமையம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் தொன்மையை சிங்களவர்களின் தொன்மைக்கும் முந்தியது என நிறுவக் கூடிய எந்தவொரு தொல்பொருள் சின்னத்தைக் கண்டுபிடிக்கும் போதும் அதனைக் கைவிடுவது , மறைப்பது , அழிப்பது அல்லது சிங்கள- பௌத்த மரபுவழிச் சின்னமாக திரிபுபடுத்துவது போன்றவை தொல்பொருளியல் திணைக்களத்தின் பிரதான பணிகள் எனவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதன் காரணமாக வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் குறித்த சம்பவத்தை எதிர்த்தும் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவம் இன வாதத்தை மக்கள் மத்தியில் தூண்டுவதாக காணப்படுவதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில் இதனைக் கண்டித்து போராட்டங்களும் எழுந்து வருகின்றன.

வடக்கு கிழக்கில் தொல்லியல் என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை தொல்லியல் திணைக்களம் சுவீகரிக்கின்றது.

இத்தகைய சுவீகரிப்புகளால் இலங்கைத்தீவில் இனங்களுக்கிடையே அமைதியற்ற நிலைமை உருவாகி வருகிறமை கண்கூடு.

ஆக்கிரமிப்புகளையும், சுவீகரிப்புகளையும் மேற்கொள்ளாமல் இருந்தாலே வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் இன நல்லிணக்கம் என்பது மேலோங்கும் என்பது பலரின் கருத்தாகும்

Recommended For You

About the Author: admin