‘‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்தினால் நீக்க முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தினால் இரத்து செய்ய முடியாது.
மக்களுக்கு வாழும் உரிமையை வழங்குவதே முதலாவது மனித உரிமையாகும். அடுத்து பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதாகும்.
நாட்டில் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக கடந்த 14 மாதங்களில் 42 புதிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.‘‘ என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும், 62 சட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனை இம்முறை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாவிட்டால் அடுத்த நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றப்படும் எனவும் கூறினார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (03) இடம்பெற்ற சட்ட சீர்திருத்தம் தொடர்பாக ‘வட்ஸ் நிவ்’ இளம் சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
‘‘நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம்.
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச நிறுவனங்களின் கட்டமைப்பை மாற்றியமைத்து அனைத்து அரச கூட்டுத்தாபனங்களையும் நிறுவனங்களாக மாற்றி, அந்த அனைத்து நிறுவனங்களையும் பிரதான கம்பனிகளுக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது நிதி முகாமைத்துவச் சட்டம், பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டம், விவசாயச் நவீனமயமாக்கல் சட்டம் என்பவற்றைப் போன்றே இந்த அனைத்து இலக்குகளை அடையக்கூடிய பொருளாதார மாற்றச் சட்டம் கொண்டு வரப்படும்.
தற்போதுள்ள முதலீட்டுச் சபைக்குப் பதிலாக முதலீட்டு ஆணைக்குழுவொன்று உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுச் சபைக்குக் கீழுள்ள வர்த்தக வலயங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட வர்த்தக வலயங்கள் என்பன அதன் கீழ் நிர்வகிக்கப்படும்.
இந்த புதிய சட்டங்கள் கொண்டு வருவதை சிலர் தடுக்க முயன்றாலும் நாடாளுமன்றம் நிறைவேற்றிய பின்னர் அந்த சட்டங்களை யாராலும் ரத்து செய்யவோ அல்லது மறைமுகமாக செயல்படுத்தாதிருக்கவோ முடியாது.
வியாக்கியானம் வழங்கும் போர்வையில் நாட்டின் சட்டங்களை மட்டுப்படுத்தி நாடாளுமன்ற அதிகாரங்களை மட்டுப்படுத்த சிலர் முயன்றாலும் அவ்வாறு எதுவும் செய்ய முடியாது.
1972ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் நாட்டின் அதிகாரம் நாடாளுமன்றத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் இல்லை.
ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு நிறைவேற்று அதிகாரம் உள்ளது. நாடாளுமன்றத்தால் அதனை நீக்க முடியும். ஆனால் நாடாளுமன்றத்தினால் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை நீக்க முடியாது.
யாரேனும் இந்த சட்டங்களை மட்டுப்படுத்த விரும்பினால், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, சட்ட மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு முன்பாக பரிசீலிக்க முடியும்.‘‘ என்றார்..