இலங்கையில் சுமார் 4 இலட்சத்து 45ஆயிரம் பேர் போதைப்பொருள் பாவனைக்கு ஆட்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதில் 122ஆயிரம் பேர் ஹெரோயின் பாவனையில் ஆட்பட்டுள்ளனர். கேரளா கஞ்சாவுக்கு இரண்டு இலட்சத்துக்கு 75ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளுக்கு ஆட்பட்டுள்ளனர் என்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நகர் மற்றும் கிராமங்களிலும் போதைப்பொருள் பாவனை
இதேவேளை இலங்கையின் நகர் மற்றும் கிராமங்களிலும், போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ஹெரோயினை விட அதிகளவில் ஐஸ் என்ற போதைப்பொருளே அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த ஐஸ் போதைப்பொருள் அதிகளவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஆபத்தான விடயம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நோய்களால் பாதிக்கப்படும் நிலை
இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள் ஒரு வருடத்துக்குள் சுவாசம் உட்பட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படும் நிலைக்கு உள்ளாகின்றார்கள்.
அத்துடன் இந்த போதைப்பொருளை பயன்படுத்துபவர்கள், திருட்டு, மற்றும் வழிப்பறிப்பு கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு மக்களுக்கு பாதிப்புக்களையும் ஏற்படுத்தி வருவதாக அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டார்.
உதாரணமாக கொழும்பில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, 3700 குடும்பங்களில் 1000 குடும்பங்களின் உறுப்பினர்கள் போதைவஸ்து பாவனைக்கு ஆட்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கொழும்பில் மாத்திரம் 50ஆயிரம் பேர் போதைப்பொருள் பாவனையாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.