இலங்கையின் அரசியல் விவகாரங்களில் சீனாவினதும், இந்தியாவினதும், அமெரிக்காவினதும் தலையீடுகள் அதிகரித்துள்ளன.
இந்த விவகாரம் இலங்கைத் தீவின் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.
கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்த ஷி யென் 5 என்ற சீனாவின் ஆய்வுக் கப்பலில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
சீனா இலங்கை மீது அதிருப்தி
சீன ஆய்வுக் கப்பல்களின் வருகைக்கு புதுடில்லியில் இருந்து பிரயோகிக்கப்படும் கடும் அழுத்தங்கள் மற்றும் அமெரிக்காவின் தலையீடுகளால் இலங்கை தீவின் அரசியல் கொந்தளிப்பான நிலையிலேயே உள்ளது.
ஷி யென் 5 கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் மேற்கொண்ட ஆய்வுகளால் இந்தியா தமது கவலையை வெளிப்படுத்தி இருந்தது.
அதனால் கடந்த நவம்பரம் மாதம் திட்டமிடப்பட்டிருந்த ஷி யென் 6 கப்பலின் இலங்கை வருகையை தடுக்க புதுடில்லியில் இருந்து கடும் எதிர்ப்புகள் வெளியானது. அந்த பின்புலத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதம் Xiang Yang Hong 3 கப்பல் கொழும்பு வருகைக்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பால் இந்த இரண்டு கப்பல்களின் இலங்கை வருகைக்கு தடை ஏற்பட்டதுடன், 2024ஆம் ஆண்டு முழுவதும் ஆய்வுக் கப்பல்களின் இலங்கை வருகைக்கு அரசாங்கம் இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், இலங்கையின் நடவடிக்கைகளுக்கு சீனா வெளிப்படையான கவலையை வெளியிட்டுள்ளது. இந்தியா வற்புறுத்தல்களையும் கடுமையான சீன அரசாங்கம் விமர்சித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்
கப்பலின் வருகையை இந்தியா தடுத்தி நிறுத்தியதன் மூலம் இந்தியா இராஜதந்திர வெற்றியை பெற்றுள்ள போதிலும், இந்த விவகாரம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தமது இராணுவ பலத்தை நிலைநிறுத்த சீனா எடுத்துவரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த அமெரிக்காவும் இலங்கையின் அரசியல் விவகாரங்களில் தலையீடுகளை அதிகமான செலுத்தியுள்ளது.
இந்த பின்புலத்தில் சீனாவின் எதிர்ப்புகள் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.